மணல் மாபியா நமக்கு சொல்வது என்ன?

இயற்கை வளம் பொருந்தி பொழிவு தரும் ஊரே பொத்துவில். ஆனால், இன்றோ அதன் சூழ்நிலை மாறி இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றன. முறையான நீர்ப்பாசன திட்டங்கள் இல்லாமல் ஒரு போகத்துக்கு 12000 தொடக்கம் 17000 ஏக்கர்கள் வரை வேளாண்மை செய்யப்படுகிறது. வரும் காலங்களில் தண்ணீர் என்பது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.

 பொத்துவிலில் தண்ணீருக்கு அடுத்தபடியாக உள்ள மிகப் பெரிய பிரச்னை "மணல் மாபியா' என்று சொல்லப்படுகிறது. மணல் கொள்ளை. குறிப்பாக, ஆற்று மணல். ஒவ்வொரு நாளும் டன் கணக்கில்  சட்டத்துக்குப் புறம்பாக ஆற்று மணல் சுரண்டப்படுகிறது. கோடிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


ஆற்று மணலை எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கு என்ன பிரச்னை? 


ஆற்று மணலைச் சுரண்டுவதால் ஆறுகளின் சூழ்நிலை மண்டலம் (River Eco System) பாதிப்படைகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு கியூபிக் மீட்டர் (Cubic Metre) மணலை எடுத்தால் மூன்று கியூபிக் மீட்டர் தண்ணீரை இழக்க நேரிடும்.

 மணலில் காணப்படும் நுண்ணுயிரிகள் மண்ணுக்குச் செழிப்புத் தன்மையை கொடுக்கின்றன. அத்தகைய நுண்ணுயிரிகள் (Micro Organism) ஆற்று மணல் அதிகமாக அள்ளப்படுவதால் அழிந்துவிடும். குறிப்பாக, இரண்டு நுண்ணுயிரிகளைச் சொல்லலாம். ஒன்று பைட்டோ பிளாங்டான் (Phyto Plankton), மற்றொன்று ஸூ பிளாங்டான் (Zoo Plankton). இந்த இரண்டு நுண்ணுயிரிகளும் மணல் சூழ்நிலை மண்டலத்தில் உள்ள அழுகிய, மட்கிய பொருள்களை உள்கொள்ளுவதால் அந்தச் சூழ்நிலை மண்டலம் சுத்தம் செய்யப்படுகிறது.


 மேலும், தண்ணீரின் PH அளவை நிலைப்படுத்துகிறது. தண்ணீரின் அமிலம், காரத் தன்மையை மாறவிடாமல் இந்த நுண்ணுயிரிகள் நிலைப்படுத்துகின்றன. இதனால் நன்னீராக நமக்குத் குடிதண்ணீர் கிடைக்க உதவுகிறது.

 முன்பெல்லாம் நாம் ஆற்று ஓரங்களில் கையை வைத்துத் தோண்டினாலே தண்ணீர் வரும். ஆனால், இன்று 100 அடிக்கு மேல் தோண்டினாலும் தண்ணீர் வருவது இல்லை. ஏனென்றால், நாம் ஆற்று மணலை அதிகமாகச் சுரண்டி விட்டதால் நிலத்தடி நீரை சேமிக்க முடியாமல் போகிறது. மேலும், ஆறுகளில் நீர்வரத்து குறைந்து, அதன் சூழ்நிலை மண்டலம் இன்று பாலைவனமாக மாறி வருகிறது. இதனால், அங்கு வாழும் தாவரம், விலங்கினங்களும் அழிந்து வருகின்றன.


 குறிப்பாக, செங்காமத்தை அண்டிய ஆற்றுப்பிரதேசங்கள் நாவலாறு குஞ்சானோடை ஆற்றுப்படைகள் மாசடைந்து அதன் பொலிவை இழந்து வருகிறது. செங்காமம் ஜெய்க்கா போன்ற பகுதிகளில் இன்று குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர் குறைந்து வருவதோடு விவசாயமும் பாதிப்படைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளது, ஏனென்றால், மழைநீரை சேமிக்க போதுமான அளவு மணல் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றில் குறைந்து வருகிறது. ஆற்றுப் படுகைகளில் இன்று வெப்பம் அதிகரித்து வருகிறது. நாமே நம் விளைநிலங்களை அழித்து வருகிறோம்.

 பூச்சிக் கொல்லி, இரசாயன உரங்களை இட்டதனால் மண்ணின் தன்மையே மாறிவிட்டது. நிலத்தடி நீரைச் சேமிப்பதில் ஆற்று மணல் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், நீரைச் சேமிப்பதோடு வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து மணல் நம்மைப் பாதுகாக்கிறது. இப்பொழுது பொத்துவிலில் ஆறுகளின் சூழ்நிலை மண்டலம் ஆபத்தில் உள்ளது. 


ஆற்று மணலை அதிக அளவில் சுரண்டுவதால் பல்லுயிர்களின் எண்ணிக்கை ஆற்றுச் சூழல் மண்டலத்தில் குறைந்து வருகிறது. உதாரணமாக ஆற்றின் ஓரமாக ஓங்கி வளர்ந்து காட்சி தரும் மருத மரங்கள் இதனால் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகிவிட்டது. இப்பொழுது இதன் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இது அழிந்து வரும் தாவர இனத்தில் வைக்கப்பட்டுள்ளது.


 எமது ஆறுகள்  இன்று மாசடைந்து வருவதோடு நீர்வரத்தும் குறைந்து வருகிறது. இதனால், இடம் பெயர்ந்து வரும் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 


 ஓர் ஆறு உயிர்ப்புடன் இருக்க வேண்டுமானால் அதற்கு மிக முக்கியமாக மூன்று காரணிகள் தேவைப்படுகின்றன.


 1. இயற்பியல் காரணிகள் Physical Factors (தட்பவெப்பநிலை).


 2. வேதியியல் காரணிகள் Chemical Factors (கரையும் தாதுப் பொருள்கள்).


 3. உயிர்க் காரணிகள் Biological Factors (தாவர மற்றும் விலங்குகள்).


அதீத மண் அகழ்வு இந்த மூன்று காரணிகளையும் பாதிப்படையச்செய்யும்! இதனால் இயற்கையின் இயல்புச்சமனிலை இல்லாமல் போய்விடும்!


 

 ஆறுகளும், அதனைச் சார்ந்த உயிரினங்களும் அழியாமல் பாதுகாத்தால் மட்டுமே அடுத்த தலைமுறையினர் பிரச்னைகள் அதிகம் இல்லாமல் உயிர் வாழ முடியும்.


தொடரும்....

Shifan AC Bhaai

0/Post a Comment/Comments

புதியது பழையவை