பொதுவெளியும் சமூகப் பிறழ்வு இளைஞர்களும்.


நாம் இன்று அரசியல் ரீதியாக மாபெரும் வெற்றி ஒன்றைச் சுவைத்துள்ளோம். இந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதின் முக்கிய பங்குதாரர்களாக இளைஞர்களைக் குறிப்பிட்டுக் கூறலாம். அண்மைக்காலமாக வெற்றியின் பின்னரான இளைஞர்களின் சமூகப் பிறழ்வு நடத்தைகள் பொதுவெளியில் அவர்கள் வெளிக்காட்டும் தன்மை காரணமாக இந்த மாபெரும் வெற்றியை மிகவிரைவில் நாம் இழந்துவிடுவோமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது.


இளைஞர்களை உற்று நோக்கின் எல்லாவற்றையும் நோக்கி கேள்வி எழுப்புகின்றார்கள்; அதுவரைக்கும் சரி, ஆனால் சொல்லப்படுகிற விடைகளுக்கான காரணகாரியத் தொடர்பில் சரியாக அமைவினும் அதை ஏற்காது; அவர்களின் சொந்த கருத்தே விடையாக வரவேண்டும் என்று அடம்பிடிப்பது அவர்களின் உளச்சிக்கலைப் புடம் போட்டுக் காட்டுகின்றது.


தற்போதைய இளைஞர் சமூகத்தின் புதிய நடைமுறைகளில் ஒன்று; முரணான கேள்வி கேட்பதால் விர்சனத்துக்குள்ளாகித் தன்னை முன்னிலைப்படுத்துகின்ற பிழையான முன்னுதாரணங்களைத் தன்னுள் எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது வெள்ளிடமலை.


எமது இளைய சமூகத்தில் சிலர் இனவாத பிரதேசவாத அரசியல் கட்டமைப்புக்களையே தங்களது அரசியல் வழியாக எடுத்துச் செயற்படுகின்றமையைக் காணக்கூட்டியதாக உள்ளது. இத்தகைய குறுகிய சிந்தனை நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும் என்ற புறவினையை மறந்து பொதுவெளியில் செயற்படுவதனை அவதானிக்க முடிகின்றது. 


விடயதானங்களுடன் தொடர்பற்ற நிலையில் அது தொடர்பான விவாதங்களில் தங்களது மூக்கை நுழைத்து தங்களின் கருத்தைத் திணிக்கும் பொருட்டு அறியாமை காரணமாக விடயதானத் தொடர்புடைய கல்வியாலாளர்களையும் எள்ளி நகையாடும் இளஞ் சமூகமாக மாறிவருவதையும் காணக்கூடியதாக உள்ளது.


எதிர்க் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அற்ற சமூகமாக மாறிவருவதனால் ஆரோக்கியமான உரையாடலினூடாக கட்டியெழுப்ப வேண்டிய சமூகத்தில் பல முரண்பாடுகளை வலிந்து திணித்துக் கொள்பவர்களாகவும் உள்ளதாகக் காணக்கூடியதாக உள்ளனர்.


மடைமாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் இது தொடர்பாக முக்கிய கவனம் செலுத்த வேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பாக எம்மை வெளிச் சமூகமாக இருந்து பார்க்கின்றவர்களுக்கு பிறழ்மனப்பாங்கு கொண்ட இளைஞர் சமூதாயத்தைக் கொண்டு ஒரு தலைமுறை உருவாகுவாக்குவதாக விமர்சனத்தை மடைமாற்றம் செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் ஏற்க வேண்டி வரும். 


காரணகாரியத் தொடர்புடைய விடயங்களோடு ஒத்துப்போகாத பிறழ்வான நடத்தையை வெளிக்காட்டுவது தான் சார்ந்த சமூகத்தை இழி நிலைக்கு இட்டுச் செல்லும். 


எனவே தேடல், அறிதல், ஆய்தல் போன்ற செயற்பாடுகளூடாக தமது கருத்துக்களை முன்வைக்கும் இளைஞர் சமூகக் கட்டமைப்பே எமக்கு அவசியமாக உள்ளது. எனவே இளைஞர்கள் தங்களது நடத்தையில் சிரத்தை கொண்டு நல் கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு; கருத்துக்களை கருத்துக்களாலேயே எதிர்கொள்ளும் ஆரோக்கிய சமூகாக மாற வேண்டும் என்பதே எனது அவா!.


ஹாலீத்

0/Post a Comment/Comments

புதியது பழையவை