குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் ராணியும் இருக்கலாம்....
இலங்கையின் சராசரியாக 9% வீடுகளுக்கு வெளிநாட்டு இருந்து பணம் கிடைக்கிறது. அது வடக்கு மாகாணத்தில் இன்னும் அதிகம். யாழ்ப்பாணத்தில் 16% ஆன வீடுகளுக்கும் , முல்லைத்தீவில் 10% ஆன வீடுகளுக்கும், வவுனியாவில் 24% ஆன வீடுகளுக்கும் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் மூலம் பணம் கிடைக்கிறது. மலையக மக்களிலும், முஸ்லிம்களிலும் மத்திய கிழக்கில் வேலை செய்பவர்கள் அதிகம். ஒரு வீட்டுக்கு சராசரியாக வருடத்துக்கு 260,000 ரூபா, அதாவது மாதத்துக்கு 20-25 ஆயிரம் ரூபாய் அனுப்பப்பட்டு வருகிறது என்று IPS செய்த ஆய்வு குறிப்பிடுகிறது. எனவே அவர்களின் அடிப்படை செலவுகளில், அவர்களின் நுகர்வில் வெளிநாட்டு பணம் கணிசமான பங்களிப்பை வழங்குகிறது.


OPEC இனால் விற்கப்படும் எண்ணெய் ஒரு பரல் 26 டாலராக இருக்கிறது, அதன் விலை 2013/14 காலப்பகுதியில் 120 டாலர்களில் இருந்தது. நீண்ட காலமாகவே எண்ணெய் விலை குறைந்து வருவது மத்திய கிழக்கு நாடுகளை இக்கட்டில் தள்ளி உள்ளது. சவூதி அரேபியா ஏற்கனவே சில தொழில்களில் தங்கள் நாட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறி வேலை குறைப்பு செய்து கொண்டு வருகிறது. இப்போது மத்திய கிழக்கில் இருந்து விமானம் விமானமாக வந்து இறங்கி கொண்டு இருக்கிறார்கள்.


நான் முன்னர் வேலை செய்த இடத்தில் நடுத்தர வயதுடைய கண்ணனும் அவரது மனைவி ராணியும் Canteen நடத்திக்கொண்டு இருந்தார்கள். பதின் வயதில் இரண்டு பிள்ளைகள் வேறு கொழும்பில் நல்ல பாடசாலையில் படித்துக்கொண்டு இருந்தார்கள். அவரது மனைவி செய்யும் rolls, pattis நல்ல taste ஆக இருக்கும். ஒரு நாள் கண்ணன் தான் canteen விட போவதாக சொன்னார். கட்டுப்படி ஆகவில்லையாம், வருமானம் போதவில்லை. மனைவி பேக்கரி வேலைக்கு குவைத்துக்கு போவதாகவும், தான் செக்யூரிட்டி / இல்லாவிடில் எதாவது கம்பெனியில் டிரைவர் வேலை தேடுவதாகவும் சொன்னார். மாத முடியில் அவர்கள் Canteenஐ பாரம் குடுத்து விட்டு போய்விட்டார்கள். எதோ கம்பெனி contract எடுத்து அவர்கள் கொடுத்த tea மட்டமாக இருந்ததும் பின்னர் நடந்தது.


அதற்கு பின்னர் எப்போதும் அவர்களை சந்தித்தது இல்லை. ராணி அனுப்பிய பணத்தில் அவர்களின் கல்வியை தொடர்ந்து கொண்டு இருக்கலாம். ஒரு அம்மாவாக இரண்டு பிள்ளைகளை இங்கே விட்டுவிட்டு குடும்ப சுமையை சுமக்க பாலைவன தேசத்தில் வேலை செய்யும் எத்தனையோ அம்மாக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். இந்த நாட்களில் குவைத்தில் இருந்து வந்திறங்கும் எதோ flight டில் ராணியும் இருக்கலாம். இதற்கு பிறகு அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்களின் குழந்தைகளின் படிப்புக்கு என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியே.


வெளிநாடு பணம் கிடைக்கும் பல குடும்பகளின் வாழ்க்கை மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு இப்போது பசுந்தாக இல்லை.


தங்கள் குடும்பங்களின் சாப்பாட்டிற்கு, தரமான கல்விக்காகவும் குடும்பங்களை பிரிந்தும், இப்போது வேலை இல்லாமலும் திரும்பி வருபவர்களின் வலிகள் அதிகம். மத்திய கிழக்கும் அங்கிருந்து அனுப்பும் ரியால்களும் பல குடும்பங்களின் வாழ்க்கையின் உயிர் நாடி, அது ஆட்டம் காணும்போது ஏற்படும் சமூக பொருளாதார தாக்கம் மக்களுக்குள் பெரிதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

0/Post a Comment/Comments

புதியது பழையவை