தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்காலத்தடை


பொத்துவில் முகுது மகா விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில்
பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொத்துவில் பிரதேசத்தின் முகுது மகா விகாரைக்கான காணி தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து, தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தினால் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிவான் எம்.எச்.முஹம்மட் றாபி குறித்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

முகுது மகா விகாரைக்குரித்தான 30 ஏக்கர் காணி தொடர்பிலான நில அளவை அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அப்பிரதேச குடியிருப்பாளர்களின் நிலை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இவ்வழக்கு விசாரணையில் எதிரிகளான குடியிருப்பாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மற்றும் சட்டத்தரணி முஹம்மட் கதீர் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது, குறித்த காணி தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமும் தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் படியும் 30 ஏக்கர் காணியை மாத்திரமே அளவீடு செய்வதற்கு அத்திணைக்களத்திற்கு அதிகாரம் உள்ளது என சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனையடுத்து, தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தின் சார்பில் வருகை தந்திருந்த உத்தியோகத்தர்களிடம் இவ்விவகாரம் தொடர்பில் நீதிவான் விளக்கம் கோரியதையடுத்து நீதிவான் எம்.எச்.முஹம்மட் றாபி குறித்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

பொத்துவில் முகுது மகா விகாரைக்கான காணியில் குடியிருப்போர் சட்டவிரோத கட்டிடங்களை அமைப்பதாகக் குற்றஞ்சாட்டி கடந்த 2019 நவம்பர் மாதம் தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

புதியது பழையவை