பிரித்தானிய சைவக் கோயில்கள் ஒன்றியத்தினால் ஊறணி தமிழ் விவசாயிகளுக்கு நிவாரணத் திட்டம்



பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் அம்பாறை மாவட்டத்தில் காய்கறி இரட்டை நிவாரணச் செயற்பாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பொத்துவில் பிரதேசத்திற்குச் சென்று ஊறணி விவசாயக் கிராமத்தில் அங்குள்ள செய்கையாளர்களிடம் கத்தரிக்காய் மற்றும் மிளகாய் கொள்வனவு செய்யப்பட்டது. கிலோ 30 ஷரூபா வீதம் 1500 கிலோ கத்தரிக்காய், கிலோ 100 ஷரூபா வீதம் 200 கிலோ மிளகாய் கொள்வனவு செய்யப்பட்டது.

இன்றைய நிலையில் காய்கறிகளை விற்பனை செய்ய வழியின்றி அல்லலுறும் கமக்காரர்களுக்கு இத்திட்டம் பேருதவியாக அமைந்துள்ளது.

திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் க.சதீஸ்கரன் ஆகியோர் நேரடியாக வந்து இச்செயற்பாட்டில் கலந்து கொண்டு காய்கறிச் செய்கையாளர்களுக்கு ஆதரவளித்தனர்.

பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள் ஒன்றிய இணைப்பாளர் சோ.வினோஜ்குமார், காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் உட்பட மற்றும் பலர் இந்த இரட்டை நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்..

இவ்விரட்டை நிவாரணச் செயற்பாடு கடந்த மாதத்தில் 4 தடவைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. அது பொதுமக்கள் மத்தியிலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

பாடுபட்டு, சிரமப்பட்டு பயிர் செய்த விவசாயிகளிடமிருந்து அவர்களது உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதன் மூலம் அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் அதேவேளை ஊரடங்கு காரணமாக முடங்கிக் கிடந்த ஏழைமக்களுக்கு இலவச நிவாரணமாக கத்தரிக்காய், வெண்டிக்காய், மிளகாய் வழங்கப்பட்டமை இக்காலத்தில் உதவியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(காரைதீவு தினகரன் குறூப் நிருபர்)

0/Post a Comment/Comments

புதியது பழையவை