
பொத்துவில் பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.
தவிசாளர் எம்.எஸ்.எம். வாஸீத் நேற்றுமுன்தினம் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்ட மொத்த வருமானமாக 09 கோடியே, 27 இலட்சத்து 65 ஆயிரம் எனவும், மதிப்பிடப்பட்ட மொத்த செலவீனமாக 9 கோடியே 27 இலட்சத்து 63 ஆயிரம் ஆகவும் மீதியாக இரண்டாயிரம் ரூபாவாகவும் தெரிவித்து அறிக்கை சமர்ப்பித்தார்.
இதனை அடுத்து பட்ஜெட் தொடர்பில் ஆதரவாகவும், எதிராகவும் பெரும் வாதப், பிரதிவாதங்களை தெரிவித்தனர்.
பொத்துவில் பிரதேச சபைக்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப் படுத்தும் 21 உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர்.
மொத்த உறுப்பினர்கள் 21 பேரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவர் சமூகமளித்திருக்காத நிலையில் வரவு செலவுத்திட்டத்திற்கான அங்கிகாரம் தவிசாளரினால் கோரப்பட்டது. இதன் போது முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஐவர் உட்பட ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐவருமாக 10 பேர் இதற்கு எதிராக வாக்களித்தனர்.
இந்த பட்ஜெட்டுக்கு ஆதரவாக 10 உறுப்பினர் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர். ஆதரவு வழங்கிய 10 பேருடன் தவிசாளரின் ஆதரவு வழங்கப்பட்டதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பெரும் ஆரவாரத்துடன் நிறை வேற்றப்பட்டது. வரவு செலவுத்திட்டத்தில் பொதுநிர்வாகம், சுகாதார சேவை, பௌதீக திட்டமிடல், பொது பயன்பாட்டுச் சேவை மற்றும் நலன்புரி சேவை ஆகியனவற்றுக்கு அதிகமான நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதேசத்தின் வட்டார ரீதியான அபிவிருத்திக்காக உறுப்பினர்களுக்கு 10 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யும் வகையில் இம்முறை வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என தெரிவித்தார்.
நன்றி: தினகரன்
கருத்துரையிடுக