அபிருத்திக்கென ஒவ்வொரு தொகுதிக்கும் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!


அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 300 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

அத்துடன் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடுகளையும் சேர்ந்து இருக்கின்ற குறுகிய காலத்துக்குள் முடியுமான உச்சகட்ட அபிவிருத்திகளை செய்வோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சுகாதார இராஜாங்க அமைச்சராக பைசால் காசிம் பதவியேற்றத்தை வரவேற்கும் முகமாக நேற்றிரவு (28) நிந்தவூரில் நடைபெற்ற மக்களின் எழுச்சி விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது, அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசமானது பல தடவைகளாக தங்களது தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. பொத்துவில் தேர்தல் தொகுதியில் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தேவைப்படுகின்ற ஒரு நிலையில், பைசால் காசிம் தனது பதவியை தக்கவைத்துக்கொண்டிருப்பதானது அவரது ஆளுமையைக் காட்டுகின்றது.

நாங்கள் ஆளும் கட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருந்தாலும் பைசால் காசிமின் செயற்பாடுகள் கட்சிக்கு பாரிய பங்களிப்புச் செய்துள்ளன. அமைச்சர் என்றவகையில் தனது தொகுதிகளுக்கு அப்பால் பல மாவட்டங்களில் அதிகளவான அபிவிருத்திகளைச் செய்துள்ளார். அவரது பதவியேற்பு நிகழ்வுக்கு, நாடளாவிய ரீதியிலிருந்து நூற்றுக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் வருகைதந்து அதற்கு சான்று பகர்ந்தார்கள்.

வரலாற்றில் என்று இல்லாவாறு கடந்த 3 வருடங்களுக்குள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நிந்தவூரில் அமுல்படுத்தியிருக்கிறோம். அதற்கு தடைபோடுவதற்கு உள்ளூராட்சி சபை ஊடாக சில முயற்சிகள் நடந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் எஞ்சியிருக்கின்ற ஒரு வருடத்துக்குள் முடியுமான இன்னும் பல அபிவிருத்தி திட்டங்களை செய்துமுடிப்போம்.

ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சர்கள் எல்லோரும் ஒன்றுகூடி பேசியபோது, ஒவ்வொரு தொகுதிக்கும் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதான தீர்மானத்தை நிதி அமைச்சர் அறிவித்தார். அதற்கு மேலதிகமாக அமைச்சுகளின் ஒதுக்கீடுகளையும் சேர்த்து, எஞ்சியிருக்கின்ற காலப்பகுதிக்குள் முக்கியமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்த அபிவிருத்திகளை எல்லா ஊர்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கின்ற பணியை எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருமாகச் சேர்ந்து செய்வார்கள். என்றுமில்லாதவாறு பாரிய அபிவிருத்திப் புரட்சிகளை கரையோர பிரதேசங்களில் அமுல்படுத்துவதற்கான வாய்ப்பு இம்முறை எங்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு சந்தோசமடைகிறோம்.

அதேபோன்று, உரிமை சார்ந்த விடயங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் தீவிரம்காட்டி வருகின்றது. தீர்க்கப்படாத பிரச்சினைகளை ஜனாதிபதி மட்டத்திலும், பிரதமர் மட்டத்திலும் எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருமாக சேர்ந்து பேசியிருக்கின்றோம். எஞ்சியிருக்கின்ற காலப்பகுதிக்குள் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண நாங்கள் அனைவரும் இன்னும் தீவிரமாக செயற்படவுள்ளோம்.

காணிகள் பறிபோன விவகாரத்தில் யாருமே செய்யாதளவுக்கு தீவிர முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். காணிப் பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள வன பரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்கள், தொல் பொருளியில் திணைக்களம், நில அளவைத் திணைக்களம் ஆகியவற்றின் உயரதிகாரிகளுடன் மாவட்ட அரசாங்க அதிபரையும் அழைத்துக்கொண்டு களவிஜயம் மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டோம்.

பின்னர் காணிப் பிரச்சினைகள் சம்பந்தமான அறிக்கையை தயாரித்து ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்புகின்ற வேலையை, எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எனது தலைமையில் கீழிருந்து செய்துமுடித்தார்கள். ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இவ்விகாரத்தை கையாள்வதில் விவகாரத்தில் அதிக கரிசணையுடன் செயற்பட்டார். தற்போது புதிய செயலாளர் வந்துள்ள நிலையில், இதற்கான தீர்வு விடயத்தை நாங்கள் இன்னும் துரிதப்படுத்த வேண்டியுள்ளது.

இதுதவிர ஒலுவில் அஷ்ரஃப் நகர் படைமுகாம், பாலமுனை இராணுவ முகாம், அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு தொடக்கம் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வை பெற்றுக்கொடுப்பதில் நாங்கள் விடாப்பிடியாக இருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சிக்கு நாங்கள் இட்டிருக்கின்ற அரசியல் மூலதனத்தை அடிப்படையாக வைத்து இவற்றை நிவர்த்திக்கின்ற அழுத்தத்தை தொடர்ந்து பிரயோகித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பிரச்சினைகளை தீர்க்கூடிய திணைக்களங்கள் ஜனாதிபதியின் கீழ் வருகின்ற காரணத்தினால், அண்மையின் நடைபெற்ற அரசியல் கொந்தளிப்பின் தாக்கம் இவற்றில் பாதிப்பு செலுத்தாதவாறு நாங்கள் மிகவும் பக்குவமாக இவற்றை கையாண்டு வருகிறோம். ஏனைய அரசியல்வாதிகள் போன்று அறிக்கைகளோடு மாத்திரம் நின்றுவிவாமல், நிந்தரத் தீர்வை நோக்கிய முன்னெடுப்புகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சரிவரச் செய்துகொண்டிருக்கிறது.

ஒலுவில் துறைமுகம் இப்போது பாரிய பிரச்சினையாக தலையெடுத்துள்ளது. இங்கு மணலை அகழ்வதற்காக தனிதொரு கப்பலை கொள்வனவு செய்து நிறுத்திவைப்பதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றிருக்கிறோம். இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் நோக்கில் இங்குள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிசிரத்தையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இத்துறைமுகம் முழுமையாக மீன்பிடித் துறைமுகமாக மாற்றப்படுவதுடன், நுழைவாயிலை அடைத்துள்ள மணலை அகற்றி, அடிக்கடி மணல் அகழ்வதை தடுத்து, போடப்பட்டுள்ள தடுப்புக்கற்களை அகற்றுகின்ற விடயத்தில் நாங்கள் எடுத்துள்ள பொறுப்புகளை முழுமையாக சரிவர நிறைவேற்றிக் கொடுப்போம்.

நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்தான் மிகச் சிறந்தவர் என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் என்னிடம் சொன்னார். எவ்வித ஊழலும் இல்லாமல் நிர்வாக அடிப்படையில் திறமையாக செயற்படுவதாக அவரைப்பற்றி என்னிடம் பெருமையாக சொன்னார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எப்படியான கற்கைநெறிகளை அறிமுகப்படுதலாம், புதிய கட்டமைப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் நாங்கள் விரிவாகப் பேசினோம். பதவியில் இருக்கின்ற சிறிது காலத்துக்குள் இயலுமானவற்றை மிக விரைவாகச் செய்து, கல்வியின் கலங்கரை விளக்கமாக இருக்கின்ற ஒலுவில் பல்கலைக்கழகத்தை மேலும் அபிவிருத்தியடையச் செய்வேன் என்றார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

புதியது பழையவை