இனத்துவ தலைமைத்துவமா? நீதியான செயற்பாடா? தேவை எது?

Adam Saleem 
“2018 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதலாவது கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பொத்துவில் பிரதேச  சபை உறுப்பினர் Adam Saleem அவர்களுடனான தேசம் -Thesam பத்திரிகையின் நேர்காணல்” பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மக்கள் எவ்வாறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள்?

பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழுகின்ற சூழல் நிலவுகின்றது. அன்றாட வாழ்வுக்குத் தேவையான குடிநீர் பிரச்சனையும் இங்கொரு பாரிய பிரச்சனையாகும். நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையால் நீர் வழங்கல் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளும் பெரிதாக ஒன்றுமில்லை. தண்ணீர் தரவும் மறுக்கின்றனர். காரணம் கிழக்கில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு விவசாயத்திற்குப் போதுமானதாகவும் இல்லை. போக்குவரத்தும் கடினமானதாகவே இருக்கிறது, தலைநகரத்திற்கு சென்றுவரும் பஸ் சேவைகளும் அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரையில் இங்கு பின்தங்கிய நிலைமையில் உள்ளது. இங்குள்ள அரச அலுவலகங்கள் உப அரச அலுவலகங்களாகவே இருக்கிறன, கல்வி வலயம் உப கல்வி வலயமாகவே இருக்கிறது. டிப்போவும் கூட உப டிப்போவாகவே இருக்கிறது. இப்படி இன்னொரு அலுவலகத்தின் ஆதிக்கத்தின் கீழ்தான் பொத்துவில் மண் இருக்கிறது. இது வேதனைப்படக்கூடிய ஒரு விடயம். இவற்றை நிவர்த்தி செய்ய மக்கள் விடுதலை முன்னணியால் மட்டுமே முடியும். காரணம் 1948 முதல் இருந்த ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, 1980 இன் பின் வந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் பின் வந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளால் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனைகளை மக்கள் விடுதலை முன்னணியால் தீர்த்துவைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எதிர்காலத்திற்கான வேலைத்திட்டங்களும் தற்போது நடந்த வண்ணம் உள்ளன. பொத்துவில் பிரதேசத்தில் இனவாதம். மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட செயற்பாடுகள் எவ்வாறானதாக இருக்கிறது?

 அரசியல் பின்னணியுடன் கூடிய நிகழ்வுகள் அதாவது, முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம் மக்கள் மீதான குற்றச்சாட்டுகள், வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் போன்றவைகளால் கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்கள் பயப்படுகிறார்கள். முஸ்லிம் இனவாதத்தைப் பேசுகின்ற கட்சிகள் முஸ்லிம்கள் தங்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டுமென்ற கட்டாயத்தை ஏற்படுத்தி, முஸ்லிம் பிரதிநிதித்துவ முஸ்லிம் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டுமென்ற நிலைமையை உருவாக்கியுள்ளார்கள். விவசாய பாமர மக்களை அச்சத்திற்குட்படுத்தி வைத்துள்ளார்கள். இனவாத செயற்பாடுகள் என்பது என்னைப் பொறுத்தவரையில் இலங்கையில் வாழ்கின்ற சகல இனமக்களையும் பிரிக்கின்ற ஒரு விடயம். இலங்கையில் இருக்கும் அனைவரையும் மனிதர்களாகதான் பார்க்க வேண்டும், எங்களுடைய கட்சி நிண்ட அவ்வாறானதொரு சகோதரத்துவ உணர்வுக்கொண்ட கட்சியாகும். மிகச் சூட்சுமமாகமாகத் தான் இனவாதம் இங்குள்ள அரசியல் கட்சிகளால் கையாளப்படுகின்றது. உதாரணமாகக் கடந்த தேர்தல் நமக்கு பறைசாற்றுகின்றன. 1977, 1983, 1988 ற்கு பின்பு தான் சூட்சுமமான முறையில் முஸ்லிம் இனவாத அரசியல் வளர்ந்து வந்தது. அதற்கு முன்னர் இரண்டு பெரும்பான்மை கட்சிகளுக்குத் தான் வாக்களித்த வரலாறு உள்ளது. அங்கு ஆதிக்கம் செலுத்தி வரும் கட்சிகளின் மக்களுக்கான செயற்பாடுகள் எவ்வாறானதாக இருக்கிறது? நீங்கள் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளவிருக்கிறீர்கள்?

வாக்கு வங்கிகளை வைத்துக் கொள்வதற்காக இனத்தை இறுக்கிப்பிடித்துக் கொள்கின்ற அரசியல் நிலவுகின்றது. ஆனால் மக்கள் இங்கு பல்வேறுபட்ட | பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்த வண்ணம் உள்ளனர். ரூ 5469.60 சதம் மாதம் ஒன்றிற்கான அன்றாடச் செலவு அதிகரித்துள்ளது. அரசாங்கத் தொழில்கள், வியாபாரம், சிறுக்கைத்தொழில், விசாயம் போன்ற சகல துறைகளிலும் ஈடுபட்டுள்ள சமூகமாகத் தான் முஸ்லிம் சமூகம் இருக்கிறது. ஆனால் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிற முஸ்லிம் தலைவர்கள் எங்கேயாவது முஸ்லிம் மக்களுடைய உரிமைகள் சம்பந்தமாகச் சரியான முறையில் பேசியதுண்டா? ஆனால் எங்களுடைய கட்சித் தலைவரும் நாங்களும் குரல் கொடுத்திருக்கிறோம். ஆனால் இவைகளிலும் முஸ்லிம் கட்சித் தலைமைகள் சில தந்திரோபயங்களை மேற்கொள்கின்றனர். அளுத்கமயில் பிரச்சனைகள் நடந்தால் அளுத்கமயில் முதல் பேச வேண்டும். அல்லது கொழும்பில் பேச வேண்டும். கிழக்கில் அல்ல. ஆனால் இச்சம்பவங்கள் கிழக்கில் தான் அரசியலாக்கப்படுகிறது. அதேபோன்று தான் கிந்தொட்ட பிரச்சனை, அம்பாறைச் சம்பவம், கண்டி திகண கலவரம். இது தொடர்பான அங்கு சென்று பேசாமல் முஸ்லிம் அதிகமாக வாழுகின்ற பிரதேசங்களான கிழக்கிலும், மன்னாரிலும் வவுனியாவிலுமே அரசியல் பேசினர். இங்குள்ள மக்களுக்கும் அதை ஆராய்ந்து பார்ப்பதற்கான சூழலும் நேரமும் இல்லாதிருந்ததால் இவர்களுடைய கருத்துக்களை கேட்டு இனம் சார்ந்த போக்கில் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி அப்படியல்லாது எங்கு பிரச்சனை நடந்ததோ அங்கு சென்று பேசியது. இங்குள்ள பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினர் திகணை சென்று பேசியிருக்கவேண்டும். அளுத்கம் சென்று பேசியிருக்கவேண்டும், ஒழுங்கான முறையில் பாராளுமன்றத்தில் பேசியிருக்கவேண்டும். சுவீகரிக்கப்பட்ட காணி உரிமைகள் சம்பந்தமாக பேசியிருக்கவேண்டும். முஸ்லிம் மக்களை ஏமாற்றுகின்ற முஸ்லிம் இனவாத கட்சிகள் பொத்துவில் மக்களைப் பற்றி பேசுவதில்லை . ஆனால் மக்கள் விடுதலை முன்னணியாகிய நாங்கள் உரிமைக்காக பேசுகிறோம். சிறுபான்மை மக்களின் உரிமைக்காய் பேசுகிறோம், உழைக்கும் மக்களுக்காய் பேசுகிறோம். கண்டிப்பாக சிறந்த முடிவை பெற்றுக்கொடுப்போம். இனவாதம் தலைத்தூ க்கியபோது தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்தி நின்றோம். எமது தலைவர்கள் மக்களுக்காக பேசுகின்ற விடயங்கள் தமிழில் வந்து சேர்வதற்கு நாளெடுக்கிறது. சிங்கள மொழி அறியாமை தொடர்பான சிக்கல்களும் உள்ளன. அளுத்கம சம்பவம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி பேசிய விடயங்கள் பாராட்டைப் பெற்றது. ஆனால் எங்களது மக்களுக்கு தமிழில் வந்து சேர இடைவெளி எடுத்தது. பொத்துவில் 23,500 வாக்குகள் கொண்ட ஒரு பிரதேசம். இது வாக்கு வங்கியாகவே பார்க்கப்படுகிறது. கெடுபிடியான இனவாத அரசியலோடு ஒன்றித்திருக்கின்ற இம்மக்கள் இம்மண்ணுக்கான தலைமையை உருவாக்க தவறிவிடுகிறார்கள். எங்களுடைய எதிர்பார்ப்பு இம்மண்ணிலிருந்து சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்குவதேயாகும். இம்மக்கள் பற்றி பாராளுமன்றத்தில் பேசுவதற்கு மக்கள் பிரதிநிதி இங்கு தேவை, இந்த மண்ணில் அரசியல், அதிகார வெற்றிடம் இருக்கிறது. அரசாங்க நிறுவனங்களும் அடிமைப்படுத்தப்பட்டதுபோல் இருக்கிறது. இங்கு சிறந்த வளங்கள் காணப்படுகிறது. அரசியல் தரகர்கள் இங்கு இருப்பதால் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப கடினமாக இருக்கிறது. நிச்சயமாக மக்கள் விடுதலை முன்னணி அக்கனவை நனவாக்கும். மக்களுடைய காணிப் பிரச்சனை தொடர்பாக எங்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?

கட்டாயமாக, எமது பிரதேசத்தில் மிக முக்கியமான பிரச்சனை ஒன்று தான் இந்தக் காணிப்பிரச்சனை. அதாவது, வனத்திணைக்கள் அல்லது வன ஜீவராசிகள். திணைக்களத்தினால் விவசாயக் காணிகள் காலம். காலமாகவும் பரம்பரை பரம்பரையாகவும் செய்து வந்த காணிகளில் எம்மால் விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் உள்ளது. இந்தக் காணிப்பிரச்சனை குறித்த காணி உரிமையாளரின் அல்லது விவசாயியின் பிரச்சனையென்று பார்க்க முடியாது. இதில் எமது சமுதாயத்தின் வாழ்வாதார பிரச்சனையாகும். இந்தப் பிரச்சனை சம்பந்தமாக அம்பாறை மாவட்டத்திலும், அதேபோல் கிழக்கிலும் முஸ்லிம்களை பிரநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பாராளுமன்ற பிரதிநிதிகள் தலையிட்டும் தீர்க்கப்படாமல் இருக்கிறது, மூன்று கிராமங்களில் காணிப் பிரச்சனை இருக்கிறது. வேகாமம், கிராம் பகுதி, விரத்தல் போன்ற இடங்களிலிருந்து இருக்கிற கிட்டத்தட்ட 1405 ஏக்கர் காணிகள் மீளளிக்கப்படவேண்டும். அங்கே சென்று பார்த்தபோது காலம் காலமாக விவசாயம் செய்த தடம் இருக்கிறது. வெற்றுக்கண்னுக்கு புலப்படக்கூடியதாகவும் இருக்கிறது. அரசாங்கம் சிறுபான்மை மக்களை நசுக்குகின்ற நோக்கத்துடன் இந்த காணிகளை மக்களுக்கு வழங்காது தவிர்க்கின்றது. குறித்த காணிகள் 2006-1720ம் திகதி விசேடமான GPS மூலம் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காணி என்று கூறப்பட்டது. இன்னொரு விடயத்தை கட்டாயம் பார்க்கவேண்டும், 2006ம் ஆண்டு வடக்கு - கிழக்கு யுத்த சூழ்நிலை, யுத்த சூழலில் அரசாங்கத்தால் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனால் விவசாயம் செய்ய முடியாத காலமாக இருந்தது. காணிகள் இந்நேரத்தில் கைமாற்றப்பட்டன. கடந்த கால அரசாங்கம் எவ்வளவு பெரிய அநியாயத்தை செய்துள்ளது. இது சம்பந்தமாக பல போராட்டங்களை மக்கள் நடத்தியிருக்கிறார்கள். எனவே எங்களுடைய கட்சியும் விவசாயம் மற்றும் காணி சம்பந்தமாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் விஜித வேணத் இங்கு வருகை தந்து பார்வையிட்டு முடியுமானவரை இதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்று கூறினர். அந்த நம்பிக்கையில் விவசாயிகள் இருக்கிறார்கள். எனவே, இதனை மக்களுக்கு மீட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

 --ருத்ஹம்சா

0/Post a Comment/Comments

புதியது பழையவை